தகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எவ்வாறு பெறுவது?
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் விவரம்
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, போஸ்டல் ஆர்டர் மூலமோ,UCR ரசீது மூலமோ , நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். XEROX நகல் வேண்டுமானால் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் தகவல் கேட்பது?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு CPIO, O/O SUPERINTENDENT OF POs., என்று முகவரியிட்டு கேட்கலாம். நேரிடையாக தகவல் வேண்டி மனுவைக் கொடுத்தாலே CPIO அதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லை . எனவே REGISTERED POST மூலமோ அல்லது SPEED POST மூலமோ அனுப்புவது நல்லது. ஒரு துறையின் ஊழியர்கள் அந்த துறை சார்ந்த அதிகாரியிடம் தகவல் கேட்பதானால் கூடுமானவரை அந்த ஊழியர் பெயரில் கேட்பதைத் தவிர்க்கவும் . ஏனெனில் அந்த அதிகாரி உங்கள் மீது கோபம் கொண்டு உங்கள் வேலையில் குறை கண்டுபிடித்து உங்களை தண்டிக்க நினைப்பார் . ஆகவே ஒய்வு பெற்ற ஊழியர் மூலமோ அல்லது வெளியில் உள்ள பொது நல/ தொழிற் சங்க அமைப்புகள் மூலமோ நீங்கள் தகவல் கேட்பது நல்லது.
தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.
மேல் முறையீடு
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம், அதாவது APPELLATE AUTHORITY, O/O DIRECTOR OF POSTAL SERVICES என்ற முகவரியில் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு REGISTERED POST மூலம் செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில அல்லது மத்திய தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
1.தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம்,
273/378, அண்ணாசாலை, (வானவில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
போன் : 044-24357580, 24312841, 24312842
'B' Wing, II Floor
August Kranti Bhawan
Bhikaji Cama Place
New Delhi - 110 066
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
விதி விலக்குகள் :
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர் விபரங்களைக் கேட்கலாம். உங்கள் அஞ்சல் கோட்டத்தில் அல்லது மண்டல / மாநில அலுவலகங்களில் பணி நியமனங்கள் , காண்டிராக்டுகள் , டெண்டர்கள் , பொருட்கள் வாங்குவதில் முறைகேடுகள் , பணி மாறுதல்களில் முறைகேடுகள் , வியாபார அபிவிருத்தி என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து போடப்படும் மேளாக்கள் , கூட்டங்கள் , ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிகள் என்று எது குறித்த செலவு விபரங்கள் அல்லது அதற்குண்டான ரசீதுகள் , அந்த செலவு செய்திட அந்த அதிகாரிக்கு உரிய அதிகாரம் உண்டா என்பது போன்ற விபரங்கள் , அரசு வாகனங்களுக்கு உண்டான டீசல் பில் , அதற்கான மைலேஜ் , அதற்காக அவர் போட்ட பயணப்படி பில் , அவரது டயரி , அவர் ஆய்வு செய்த அலுவலகங்களின் ரிபோர்ட்கள் , இன்னும் எத்தனை எத்தனையோ நீங்கள் கேட்கலாம். ஆனால் இவ்வளவையும் கேட்பதனால் தயவு செய்து உங்கள் பெயரில் கேட்காதீர்கள் . அந்த அதிகாரி உங்களை பழி வாங்கத் தொடங்கி விடுவார் . வேறு நபர்கள் மூலம் நீங்கள் கேட்கலாம் .
தகவல் கேட்பவரை மிரட்டினால் என்ன செய்வது?
தகவல் கேட்பவரை மிரட்டுவது சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல் கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும். இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகலாம். அல்லது CHIEF INFORMATION COMMISSIONER இடம் புகார் செய்யலாம். மனித உரிமை கமிசனிடம் புகார் செய்யலாம். இது கூட உங்கள் சார்பாக உங்கள் மனைவியையோ அல்லது பிள்ளையையோ விட்டு என் தந்தையை அந்த அதிகாரி மிரட்டுகிறார் . எனவே உரிய பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளிக்கச் செய்யவும். நீங்கள் நேரிடையாக மனித உரிமை ஆணையரிடம் புகார் செய்தால் , ஏன் மேல் அதிகாரியிடம் புகார் செய்யாமல் , நேரிடையாக மனித உரிமை ஆணையரிடம் புகார் செய்தாய் என்று கேட்டு மீண்டும் மிரட்டுவார்கள்.
மத்திய மனித உரிமை ஆணையத்தின் முகவரி :-
National Human Rights Commission, Faridkot House, Copernicus Marg, New Delhi, PIN 110001
Tel.No. 23384012 Fax No. 23384863 E-Mail: covdnhrc@nic.in, ionhrc@nic.in
என்ன தோழர்களே ? இது போதுமா ? இனி நீங்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவீர்களா ?
எதிர்பார்க்கிறோம் நாம் - உங்களிடையே விழிப்புணர்ச்சியை - எதிர்காலம் உமதாகட்டும் !
No comments:
Post a Comment