JCA
NFPE-FNPO அஞ்சல் -RMS-MMS ஊழியர் கூட்டுப்
போராட்டக் குழு தமிழ் மாநிலம்.
JCA வின் அனைத்து மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று CPMG அலுவலக வாயிலில் சிறப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்ணாவிரத்தில் நேரிடையாக கலந்து கொண்டார்கள் . 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதற்கு ஆதரவாக போராட்ட களத்தில் பங்கேற்றனர். தொடங்கும் போதும் , முடிக்கும் போதும் எழுச்சி மிக்க கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தோழர். ஜெயகுமாரின் தற்கொலைக்கு உரிய உயர்மட்ட விசாரணை வேண்டியும் , மதுரை PTC இயக்குனர் மீது உரிய இலாக்கா ஒழுங்கு நடவடிக்கை வேண்டியும் , அவரை உடனே பணி மாற்றம் செய்திட வேண்டியும் JCA சார்பில் அனைத்து மாநிலச் செயலர்கள் கையெழுத்து இடப்பட்ட மகஜர் CPMG அவர்களுக்கும் NFPE/FNPO மா பொதுச் செயலர்களுக்கும் அளிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தை FNPO மாபொதுச் செயலர் தோழர். தியாகராஜன் முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார். NFPE சம்மேளனத்தின் உதவி மா பொதுச் செயலர் தோழர். ரகுபதி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
உடன் நடவடிக்கை வேண்டியும் உரிய விசாரணை வேண்டியும் NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் சார்பில் இலாக்கா முதல்வருக்கு நேரிடையாக மா பொதுச் செயலர்கள் மூலம் கடிதம் அளித்து விவாதிக்கப் பட்டுள்ளது.
தோழர் ஜெயக்குமார் அவர்களின் இறுதிச் சடங்கில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொண்டோம்.
அவரது மனைவிக்கும் , அவரது குடும்பத்தாருக்கும் நிச்சயம் இந்த துயருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் வரை தொழிற் சங்கங்கள் ஓயாது என்ற உறுதியை நாம் அளித்தோம்.
இந்தப் போராட்ட நடவடிக்கையில் பல்வேறு கோட்டங்களில் JCA மற்றும் NFPE சார்பில் தலைமட்ட சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்காங்கே எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டங்களும் கருப்பு சின்னம் அணிதலும் நடைபெற்றதாக மாநிலச் சங்கத்திற்கு செய்திகள் அனுப்பப் பட்டுள்ளது. அதன் விபரம் :-
1 ) 20.09.12 மாலை அம்பத்தூர் தலைமை அஞ்சலக வாயிலில் சுமார் 75 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்.
2) காஞ்சிபுரம் கோட்டத்தில் 21.09.12 அன்று கறுப்புச் சின்னம் அணிந்து மௌன அஞ்சலி.
3) மதுரை கோட்டத்தில் JCA சார்பில்21.09.12 அன்று மாலை சுமார் 400 பேர் கலந்துகொண்ட எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.
4) திருநெல்வேலி கோட்டத்தில் 21.09.12 அன்று மாலை சுமார் 80 பேர் கலந்துகொண்ட எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.
5) சேலம் மேற்கு கோட்டத்தில் 21.09.12 அன்று மாலை சுமார் 60 பேர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்.
6) தூத்துக்குடி கோட்டத்தில்21.09.12 அன்று 15 பெண் ஊழியர் உட்பட சுமார் 75 பேர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்.
7) கன்னியாகுமரி கோட்டத்தில்21.09.12 அன்று சுமார் 50 பெண் ஊழியர் உட்பட 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.
தாங்களாகவே முன்வந்து கொடூரமான அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் எழுப்பி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய அனைத்து கோட்ட கிளைச் சங்கங்களுக்கும் , அதன் உறுப்பினர்களுக்கும் , சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் , அதன் உறுப்பினர்களுக்கும் JCA சார்பிலும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பிலும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி .
பின்னர் நேற்று இரவு நடைபெற்ற JCA கூட்டத்தின் அடுத்த கட்ட முடிவுகள் :-
1. தமிழக முதலமைச்சருக்கும் , தமிழக காவல் துறை DGP அவர்களுக்கும், மனித உரிமை தலைமை ஆணையருக்கும் தோழர் ஜெயக்குமார் அவர்களின் தற்கொலைக்கு உரிய நடவடிக்கை கோரி , உயர்மட்ட விசாரணை கோரி அனைத்து மாநிலச் செயலர்கள் கையெழுத்திட்டு நேரிடையாக புகார் மனு அளிப்பது .
2. தென் மண்டலத்தில் இயக்குனர் தலைமையில் 26.09.12 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியை அனைத்து மாநிலச் சங்கங்களும் புறக்கணிப்பது .
3. மதுரை பயிற்சி மைய இயக்குனர் மீதும் அவருக்கு உறுதுணையாக இருந்து , தன்னுடைய நிர்வாக எல்லையை மீறி இந்த தற்கொலைக்கான காரண கர்த்தாவை மறைத்து காப்பாற்ற முயலும் தென்மண்டல இயக்குனர் மீதும் உரிய உயர்மட்ட இலாக்கா விசாரணை வேண்டியும் , பயிற்சி மைய இயக்குனரை விசாரணை முடியும் வரை தற்காலிக பணிநீக்கம் செய்திட வேண்டியும் அல்லது உடன் மாநிலத்திற்கு வெளியே இடமாற்றம் செய்திட வேண்டியும் தமிழகம் தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது .
4. தொழிற் தகராறு சட்டத்தின் அடிப்படையில் இதற்கான உரிய 15 நாட்களுக்கான வேலைநிறுத்த அறிவிப்பை எதிர்வரும் 25.09.2012 அன்று CPMG அவர்களுக்கும் , தொழிலாளர் நல தலைமை ஆணையருக்கும் , மாநில மற்றும் மத்திய மனித உரிமை தலைமை ஆணையருக்கும் அனைத்து மாநிலச் செயலர்களும் கையெழுத்திட்டு சட்டப்படி முறையாக அளிப்பது .
5. வேலை நிறுத்த போராட்டத்தை முழு வீச்சில் இயக்கப் படுத்திட மண்டல ரீதியாக அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களையும் அழைத்து ஆயத்தக் கூட்டங்கள் நடத்துவது .
4.10.12 - திருச்சி
5.10.12 - மதுரை
6.10.12 - கோவை
10.10.12- சென்னை
_________________________________________________________________
6. 11.10.2012 அன்று அனைத்து பகுதியினரையும் உள்ளடக்கி தமிழகம் முழுமைக்கும் ஒன்றுபட்ட முழுமையான வேலை நிறுத்தம் நடத்துவது.
______________________________________________________
______________________________________________________
போராட்ட களத்திற்கு சங்க வேறுபாடின்றி எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்து ஊழியர்களையும் ஒன்று திரட்டிட அனைத்து பொறுப்பாளர்களையும் அனைத்து ஊழியர்களையும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் ! இந்தக் கொடுமை இனியும் தமிழகம் அனுமதிக்கக் கூடாது ! இன்றில்லையேல் இனி என்றும் இல்லை என்பதை ஒவ்வொரு ஊழியரும் தங்கள் என்ணத்தில் , சிந்தனையில் , செயலாக்கத்தில் கொண்டிட வேண்டும் !
நமது எதிர்கால வாழ்வு காக்கப் பட !
நமது தன்மானம் காக்கப் பட !
நமது சுயமரியாதை காக்கப் பட !
அடிமைச் சங்கிலி அடித்து நொறுக்கப் பட !
கொடூரங்களுக்கும் , வக்கிரங்களுக்கும் முடிவு கண்டிட !
உயிர்ப் பலிக்கு உரிய நீதி கிடைத்திட !
கிளர்ந்தெழுவோம் தோழர்களே ! பரவட்டும் ! பரவட்டும் ! போராட்டத் தீ தமிழகமெங்கும் வெகு வேகமாகப் பரவட்டும் !