இன்றைய உலகில் எங்கும் எதிலும் அவசரம். அந்த அவசரத்தில் எவ்வளவோ நல்ல அனுபவங்களை இழந்து வருகிறோம். அதில் முக்கியமான ஒன்று மறைந்து வரும் கடிதக் கலை.
கையாளக் கூடிய கலை. கடிதம் வாழ்க்கையின் எதார்த்தத்தை எளிமையாக எடுத்துரைப்பது. மனித மனத்தின் ஆழத்தை தொட வல்லது. பண்படுத்துவது. பக்குவப்படுத்துவது.
கடிதம் எழுதுகின்ற அந்த கணப்பொழுதில் ஒரு மனிதன் என்ன நினைத்தான். நினைக்கிறான் என்பதை ஒளிவு மறைவு இன்றி படம் பிடித்துக் காட்டுவது கடிதத்தின் சிறப்பு.
ஜவஹர்லால் நேரு அவர்கள் தன் அன்பு மகள் இந்திராவுக்கு “நீ சரித்திரம் படித்தால் மட்டும் போதாது. சரித்திரம் படைக்கவும் வேண்டும்’ என்று கடிதம் எழுதினாராம். அந்த வைர வரிகள்தாம் இந்திராவின் வாழ்க்கைப் பாதையை மாற்றி நாடு போற்றும் தேசத் தலைவியாக ஆக்கியது.
யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவருடன் நேருக்கு நேரே நாம் பேசுகிறோம். ஒருவரை நேரில் காண வாய்ப்பில்லாத போது மனம்விட்டுப் பேச, உறவாட, உரையாட வாய்ப்பை ஏற்படுத்துவது கடிதம்.
நேரில் பேச முடியாத விஷயமெல்லாம் கூட கடிதம் எழுதும்போது உணர்ச்சிப்பூர்வ மான வார்த்தைகளாய் வந்து கொட்டும். “தங்கள் அன்புள்ள’என்று கடிதத்தை முடிக்கும்போது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உறவினர்கள் இருந்தாலும், நேரில் பார்த்துப் பிரிவது போல கண்ணீரை வரவழைக்கும்.
நேருக்கு நேர் தெரிவிக்க முடியாத உணர்வுகளை, எண்ணங்களை, உள்ளக் குமுறல் களை, வேண்டுகோளை சங்கடம் இல்லாமல் கடிதம் வாயிலாக தெரிவிக்கலாம். பழைய திரைப்படங்களில் கடிதமும் ஒரு கதாபாத்திர மாகவே விளங்கும். படத்தின் நாயகன் அல்லது நாயகி தான் எழுதிய கடிதத்திற்கு குரல் கொடுக்கும் போது படம் பார்ப்போரது நெஞ்சைப் பிழிவதாக இருக்கும்.
கம்ப்யூட்டர் வீட்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு “எல்லாவற்றுக்கும் நான் இருக்கிறேன்’ என்று சொல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் கடிதம் எழுதும் கலை மறைந்து வருகிறது. அஞ்சல் உறையும், அஞ்சல் அட்டையும் படியிறங்கி சென்று கொண்டிருக் கின்றன. பேனா நிறைய இங்க் நிரப்பி அஞ்சல் உறையை விரித்து வைத்து ஆரவாரமற்ற அமைதியான சூழலில் மனதோடு மனம் பேசும் வகையில் நேசத்தோடும், பாசத்தோடும் உருகி உருகி கடிதங்கள் எழுதிய அனுபவங்கள் பலருக்கு மறந்து போய்விட்டன. சிலருக்கு அந்த அனுபவங்களே கிடைக்காமல் போய்விட்டன.
கடிதத்தை பிரிப்பதற்கு முன்பே விலாசத்தின் எழுத்துக்களைப் பார்த்தே எழுதியிருப்பவர் யார் என்றும், கையெழுத்தை வைத்தே எழுதியது ஆணா?பெண்ணா? என்று கண்டுபிடித்துச் சொல்லிவிடும் சாமர்த்தியத்தை இப்போது மெய்ப்பிக்க வாய்ப்பில்லை.
எழுதிய கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டு சரியாக உள்ளே போய்விட்டதா இல்லையா என்று தட்டிப் பார்த்து விட்டு, அந்தக் கடிதத்திற்கு பதில் கடிதம் எப்போது வரும் என்று அப்போதிருந்தே காத்திருப்பது எவ்வளவு சுகமான அனுபவம்.
தபால்காரர் வரும் நேரத்திற்காக காத்திருந்து தெருவில் சைக்கிள் மணியோசை கேட்டவுடன் ஓடோடிச் சென்று கடிதம் வந்துள்ளதா என்ற விசாரிப்பதும், நமக்குரிய கடிதத்தை அவர் ஒவ்வொன்றாக தேடும் போது“அது நமக்குதான், அது நமக்குதான்’ என்று மனது துடிப்பதும், நமக்கு உண்டான கடிதத்தை கொடுக்கும் போது ஏதோ தங்கப் புதையலே கைக்குக் கிடைத்துவிட்டது போன்றதொரு மகிழ்ச்சியும்,
“கடிதம் எதுவும் இல்லை’ என்று சொல்லும் போது ஏற்படும் சிறிய ஒரு ஏமாற்றத்தையும் சொல்லில் வடிக்க முடியாது.
கடிதம் செய்யும் இந்த வேலையை இரண்டே வினாடிகளில் கம்ப்யூட்டரிலும்,செல்போனிலும் செய்து முடித்து விடலாமே என்று வாதிடலாம். ஆனால் கடிதம் எழுதுவது என்பதை ஏதோ ஒரு செய்தியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பும் சாதாரண ஒரு செயலாக மட்டும் கருத முடியாது. அதில் எத்தனை எத்தனை அற்புதமான விஷயங்கள் அடங்கிக் கிடக்கின்றன என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
பிரியமானவர்களுக்கு கடிதம் எழுதும் போது அணையில் தேக்கி வைத்திருக்கும் நீரைப் போல, மனதில் தேக்கி வைத்திருந்த அன்பு, பாசம்,நட்பு எல்லாம் வார்த்தைகளாக வந்து வரிசை கட்டி நிற்கும். கடிதங்கள் எழுதும்போது நினைவுகளின் சேமிப்பில் சம்பவங்கள் உயிரோட்டமுடன் இருப்பதால் எழுதும் வார்த்தைகளிலும் உயிர் இருக்கும்.
அன்றைய இளைஞர்கள் ஏதாவது ஒரு வகையில் காதல் கடிதம் எழுதியவர்களாகத்தான் இருப்பார்கள். வகுப்பறையில் எழுதும் கட்டுரைக்கு வேண்டுமானால் மூன்றாவது படிவம் இறுதிப் படிவமாக இருக்கும். ஆனால் காதல் வயப்பட்டு எழுதும் கடிதத்திற்கு பத்தாவது படிவம் கூட முதல்படிவமாகத்தான் இருக்கும்.
அலுவல் நிமித்தமாக கடிதம் எழுதுவது எளிதானது. ஆனால் அன்பை வெளிப்படுத்தி கடிதம் எழுதுவது கடினமானது. நெருங்கிய ஒருவருக்கு கடிதம் எழுதும்போது நேரம், சூழல், மனநிலை போன்றவையும் கடிதத்தில் பிரதி பலிக்கும். இரவு நேரத்தில் ஆள் அரவம் ஏது மின்றி தனிமையில் எழுதும் கடிதத்தில் அன்பு ஆழமாகவும், அடர்த்தியாகவும் வெளிப்படும்.
கடிதத்தை எழுதத் தொடங்கும் போது நன்றாக “மார்ஜின்’ விட்டு அழகான கையெழுத் தில் ஆரம்பித்து கடைசியில் எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் வளைத்து வளைத்து எழுதி முடிப்பது ஒரு சுகமான அனுபவம்.
வெகு தூரத்தில் உள்ளவர்களின் கடிதங்கள் படிக்கப்படும்போது வீட்டில் உள்ள ஒவ்வொரு வரும் தன்னைப் பற்றி ஏதாவது எழுதப்பட்டிருக் கிறதா என்று அறிய ஆவலோடு காத்திருப்பது வழக்கம். சில நேரங்களில் கடிதத்தை படிப்பவர் அதில் இல்லாத பெயர்களையும் சேர்த்துப் படித்து அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு.
கடிதங்களை எழுதி எழுதியே தங்கள் கையெழுத்தை மெருகேற்றிக் கொண்டவர்கள் நிறைய பேர் உண்டு. ஒருவருடைய சிந்தனை, செயல்பாடு,குணாதிசயம் போன்றவற்றைக் கூட அவருடைய கையெழுத்தை வைத்தே கண்டு பிடித்துவிடலாம். கையெழுத்தில் ஒவ்வொரு வரும் ஒரு “ஸ்டைலை’கண்டுபிடிப்பதுண்டு. சிலருடைய கையெழுத்து அச்சுகோர்த்து அச்சடித்தது போன்று இருக்கும். சில கையெழுத்து கலைநயத்துடனும், சில ஓவியம் போலவும், சில கிறுக்கல்களாகவும் இருக்கும்.
ஒருவர் எழுதிய கடிதத்தை படிப்பதற்கும் அவர் செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தியை படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கடிதத்தி லிருக்கும் உயிரோட்டம் குறுஞ்செய்தியில் நிச்சயம் இருக்காது.
சில கடிதங்களை வாசிப்பது சிறந்த அனுபவம். சில கவித்துவமாக இருக்கும். சில தத்துவங்களைச் சுமந்து வரும். நண்பர்களுக்குள் எழுதும் கடிதங்களே கூட காதல் கடிதங்கள் போல் தோற்றமளிக்கும். “என் இதய வானிலே,சிந்தனைச் சோலையிலே சிறகடித்துப் பறந்து வரும் பஞ்ச வர்ணக்கிளியே! என் இதயக் கடலினிலே, எண்ண அலைகளிலே நீந்தி வரும் பொன்மீனே!’என்றெல்லாம் நண்பர்களுக்கும் எழுதுவது உண்டு.
கடிதங்கள் வாழ்க்கையின் நினைவுச் சின்னங்கள். ஒருவர் மறைந்து போனாலும் அவர் எழுதிய கடிதங்கள் அவரின் நினைவாக இருந்து கொண்டிருக்கும். அம்மா எழுதிய கடிதத்தை அவளது பிள்ளைகளும், அவள் பாட்டியான பின் பேத்திகளும் படிப்பது எவ்வளவு சிறந்த அனுபவம்.
எவ்வளவுதான் நாம் மாறிக் கொண்டிருந் தாலும், காலங்கள் நம்மைக் கரம் பிடித்து நவீன அறிவியல் உலகுக்கு அழைத்துச் சென்றாலும் பழைய நினைவுகளுக்கு தனி இடம் உண்டு. “வாழ்க்கை என்பது வெறும் நினைவுகள்’என்று வாழ்க்கைக்கு ஒரு இலக்கணம் உண்டு. அந்த வகையில் வாழ்க்கையின் பக்கங்களை ஈரத் தோடும், பசுமையோடும் காத்து வரும் பாது காப்புப் பெட்டகம் கடிதம். காணாமல் போன அத்தகைய கடிதக் கலையை கண்டெடுக்க முயற்சிப்போம்.
நன்றி தோழர் ஈசன் இளங்கோ
No comments:
Post a Comment