அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நேற்று நாம் அறிவித்த படி இன்று ( 09.10.2012) காலை சுமார் 11.00 மணியளவில் JCA வின் கீழ் NFPE /FNPO சார்ந்த அனைத்து மாநிலச் செயலர்களும் ஒன்று கூடி, நடந்த சம்பவங்கள் குறித்தும் , JCA வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம் . இறுதியாக , தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு நாள் கால அவகாசத்தில் வேலை நிறுத்தத்தை 11.10.2012 அன்று நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து அனைவரும் கவலை தெரிவித்ததாலும், தொழிலாளர் நல ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அவகாசம் அளிக்கவும், சட்ட ரீதியாக அதற்கான வாய்ப்பை வழங்கிடவும் பலரும் ஆலோசனை வழங்கியதாலும் , வேலை நிறுத்த தயாரிப்புகளை கோட்ட மட்டங்களில் உரிய அறிக்கைகள் வழங்கி அதனை உறுப்பினர் மட்டத்தில் இன்னும் பல கோட்டங்களில் கொண்டு செல்ல அவகாசம் வேண்டுவதாலும் , வேலைநிறுத்த நாளை 18.10.2012 க்கு மாற்றி வைப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
நேற்று நிர்வாகத்திற்கு அறிவித்தபடி , உடனடியாக நமது எதிர்ப்பையும் , சட்ட பூர்வமான வேலை நிறுத்த நாள் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டியும் , அதற்கான NOTICE ஐ தயார் செய்து , அனைத்து மாநிலச் செயலர்களும் அதில் கையெழுத்து இட்டு , மதியம் 01.45 மணியளவில் DPS HQRS அவர்களிடம் நேரில் சென்று அளித்தோம். பின்னர் மதியம் 03.30 மணியளவில் தொழிலாளர் நல ஆணையத்திற்கு நேரிடையாகச் சென்று இதே NOTICE ஐ அளித்து , மாநில நிர்வாகத்தின் தன்னிச்சையான , ஒரு சார்பு நிலையை விளக்கி உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினோம். ALC (CENTRAL) அவர்களும் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த உடனே JCA சார்பில் போஸ்டர் அனுப்பிடவும் , விரிவான சுற்றறிக்கை அனுப்பிடவும் தீர்மானிக்கப் பட்டது.
மேலும் நடை பெறாமல் விடுபட்ட கோவை மண்டல வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்தை எதிர்வரும் 11.10.2012 அன்று நடத்திடவும் முடிவெடுக்கப் பட்டது . 15.10.12 மற்றும் 16.10.12 தேதிகளில் சென்னை பெருநகரத்தின் அனைத்து கோட்ட/கிளைகளுக்கும் அனைத்து மாநிலச் செயலர்களும் நேரில் சென்று வேலை நிறுத்த தயாரிப்பு பணியை முடுக்கி விடவும் தீர்மானிக்கப்பட்டது.
கோட்ட கிளைச் செயலர்கள் தனித் தனியே அவரவர் பகுதிகளில் வேலை நிறுத்த அறிக்கைகள் உறுப்பினர்களுக்கு விரிவாக அளிக்குமாறும் அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறது.
மேலும் , நாம் ஏற்கனவே வேண்டியபடி , மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனரின் கொடுமைகளால் பாதிக்கப் பட்ட தோழர்களிடமிருந்து புகார் மனுக்களை உடன் CPMG TN அவர்களுக்கு அனுப்பிடவும் அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிடவும் உரிய முயற்சிகளை எடுக்குமாறும் கோட்ட/ கிளைச் செயலர்களிடம் கோரப்படுகிறது. வாய் வழிப் புகார் ஏராளம் நமது சங்கத்தின் தோழர்கள்/செயலர்கள் அளித்தும் , அதனை எழுத்து பூர்வமாக உரிய விசாரணை செய்யும் காலத்தில் அளித்திட தயக்கம் ஏன் என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது.
தோழர். ஜெயகுமாரின் தற்கொலை குறித்து விபரம் தெரிந்த பயிலாளர்கள் உடன் அது தொடர்பான புகாரை/தகவலை CPMG TN அவர்களுக்கு நேரிடையாக BY NAME இல் பதிவுத் தபாலிலோ அல்லது விரைவுத் தபாலிலோ அனுப்பிடவும். இதுவே அந்த அப்பாவித் தோழரின் சாவுக்கு உரிய நீதி கிடைக்க உதவிடும் செயலாகும். தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நீதிக்கு அடிக்கப் படும் சாவு மணியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தோழர்களே ! வேலை நிறுத்த களம் நோக்கி நாம் விரைந்திடுவோம் !
பாதிக்கப் பட்ட தோழர்களிடமிருந்து புகார் மனுக்களை நாம் குவித்திடுவோம் !
நீதி காக்க இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம் களப்பலியான தோழரின் ஆன்மா பாராட்டும் !
No comments:
Post a Comment