NFPE

Monday 26 August 2013

இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்..(முழுவதுமாகப் படிக்கவும் )


சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.

ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.

சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும் " என்றான்.

மரம், "என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது"

சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான்.அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை.

மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம் " வா , வந்து என்னுடன் விளையாடு " என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்.நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது.

மரம் " என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்" என்றது.மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை.

வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு , மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது.

எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் "என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் " என்று சொல்லிக்கொண்டே சாகிறது.

அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான்.

# நீதி : கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!!

கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம்.

நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள்.

என்னைக் கவர்ந்த கதை.






No comments:

Post a Comment