NFPE

Friday 3 January 2014

NFIR GOING ON STRIKE BALLOT FOLLOWING AIRF FOR INDEFINITE STRIKE ON PAY COMMISSION DEMANDS


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  
வெற்றியை நோக்கி நாம் !
ஏழாவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான நமது NFPE / CONFEDERATION  சார்பாக  முதன் முதலில்  கடந்த 26.07.2012 அன்று  நாம் நடத்திய  பாராளுமன்றம் நோக்கிய பேரணியை  உணர்வுள்ள தோழர்கள் மறந்து விட முடியாது . அன்றே பாரதப் பிரதமரிடம் 10 லட்சம் ஊழியர் கையெழுத்திட்ட  மகஜரை நாம் சமர்ப்பித்ததும்  எளிதில் மறந்து விட முடியாது. இதில் தமிழகத்தின்  NFPE  அஞ்சல் பகுதியில் இருந்து மட்டும் 1000 ஊழியர்களும் , அதில் நமது தமிழக அஞ்சல் மூன்று சார்பாக 600 ஊழியர்களும்  கலந்து கொண்டோம் என்பது  நமக்கு நிச்சயம் பெருமையே .
தொடர்ந்து ஏழாவது ஊதியக் குழு வேண்டி  கடந்த 12.12.2012 அன்று, ஒரு நாள், நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக வேலை நிறுத்தம்  நாம் நடத்தியதையும் எவரும் மறந்து விட முடியாது .
அதே நேரத்தில் பாராளுமன்றத்தில்  நிதி அமைச்சகத்தின் துணை அமைச்சர்  திருமிகு . நமோ நாராயண்  மீனா அவர்கள்  ஏழாவது ஊதியக்குழு அமைத்திட அவசியம் இல்லை என்பதே அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்ததையும் எவரும் மறந்து விட முடியாது . தொடர்ந்து நாம் நடத்திய இயக்கங்களால்  நம் கோரிக்கை வலுப் பெற்றது.  தூங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் விழித்தெழத் துவங்கினர் .
பட்ஜெட்டுக்கு முந்தையதான  ஆலோசனைக் கூட்டம் என்பது இதுவரை தொழிலதிபர் களுடனும் , பன்னாட்டு  முதலாளிகளுடன் மட்டுமே  நமது நிதியமைச்சர் நடத்தி வந்த திசை மாறி, இந்த முறை  மத்தியில் உள்ள மிகப் பெரும் 11 தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசியதும், அதில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே குரலில் ஏழாவது ஊதியக் குழு  மத்திய அரசு ஊழியர்களுக்கு அமைத்திட வேண்டும்  என்றும் பஞ்சப் படி இணைப்பு என்பது  தரப்பட வேண்டும் என்றும்  குரல் எழுப்பியதையும் நாம் மறப்பதற்கில்லை . மறுப்பதற்கில்லை . நாம் ஏற்றிய ஊதியக் குழு நெருப்பு பற்றி எரியத் துவங்கியது .
1974 க்குப் பின்னர்  ஒரு வேலை நிறுத்தம் கூட நடத்திடாத , நாட்டின் மிகப் பெரிய ரயில்வே துறையின்  தொழிற் சங்கங்கள், உடனே  ஏழாவது ஊதியக் குழு கோரிக்கையை எழுப்பத் துவங்கியது மட்டுமல்லாமல் , அதன் மீது வேலை நிறுத்தம் செய்திட ஊழியர் மத்தியில் வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும்  பேசத் துவங்கின .  இதற்கிடையில் நாம் பலகட்டம் கடந்து விட்டோம் .
இதன் விளைவாகவும், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டும்  இல்லை ......இல்லை ......என்ற நிதி அமைச்சர் , ஐந்தாவது ஊதியக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்த நிதியமைச்சர்,... ஆறாவது ஊதியக் குழுவுக்கான கூட்டத்திலேயே கலந்து கொள்ளாத அதே நிதி அமைச்சர் ,....  தானே முன்வந்து ஏழாவது ஊதியக் குழு  அமைக்கப் படும் என்ற அறிவிப்பை நாம் செய்திட வைத்தோம் என்பதே நம்  தொடர் போராட்டங்களின் வெற்றியாகும்.
தற்போது அதையும் தாண்டி  நாம் 50% பஞ்சப்  படி இணைப்பு,  இடைக்கால நிவாரணம் , GDS  ஊழியர்களின் ஊதிய,மற்றும் பணி  குறித்த பிரச்சினைகளையும் ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலனை செய்திட வேண்டும் , ஐந்து கட்ட பதவி உயர்வு வேண்டும், பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் வேலை வேண்டும், புதிய பென்ஷன் திட்டம் அடியோடு ரத்து செய்திடப் பட வேண்டும்  என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி , காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான  போராட்டங்களை தொடர்ந்து நடத்தத் தொடங்கி விட்டோம் . 
இதன் தொடர் போராட்டங்கள்  தமிழகத்தில் கடந்த 19.12.2013 அன்று சென்னை ராஜாஜி பவன் முன்னிலையிலும், 30.12.2013 அன்று  சென்னை ST . THOMAS  MOUNT  தலைமை அஞ்சலகம் வாயிலிலும் , 31.12.2013 அன்று சென்னை தி. நகர் தலைமை அஞ்சலகம் வாயிலிலும் , 02.01.2014 அன்று  சென்னை சாஸ்திரி பவன் வாயிலிலும் , 07.01.2014 அன்று  சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாகவும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும்,  நடத்தவும் உள்ளோம். இது சம்பந்தமான நோட்டீஸ் தமிழகமெங்கும் ஏற்கனவே உங்களுக்கு அனுப்பப்  பட்டுள்ளது. 
எதிர்வரும் 09.01.2014 அன்று  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக  டெல்லியில்  ஜந்தர் மந்தர்  பகுதியில்  மாபெரும் தார்ணா  போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.  தொடர்ந்து  10.01.2014 அன்று டெல்லியில் நடை பெற உள்ள  மகா சம்மேளனத்தின் பரந்த செயற்குழுக் கூட்டத்தில்  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தேதி  முடிவெடுத்து அறிவிக்கப் பட உள்ளது.
இதையெல்லாம் பார்த்த  ரயில்வே துறையின் அங்கீகரிக்கப் பட்ட மிகப் பெரும் சம்மேளனங்கள்  இரண்டில் ஒன்றான  AIRF   கடந்த டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் ஊழியர்களிடையே  40 ஆண்டுகளுக்குப் பிறகு  வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு நடத்தியது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். அதில் 96.73 சத ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழு, பஞ்சப்  படி இணைப்பு,  இடைக்கால நிவாரணம்  உள்ளிட்டவைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் வேண்டும் என்று வாக்களித்திருக்   கிறார்கள். 
தற்போது ரயில்வேயின் இன்னும் ஒரு  அங்கீகரிக்கப் பட்ட சம்மேளனமான  காங்கிரசின் INTUC  யில் இணைக்கப் பட்ட NFIR  எதிர்வரும் 17.1.2014 மற்றும் 18.1.2014 இல் ஊழியர் மத்தியில் வேலை நிறுத்தத்திற்கான  வாக்கெடுப்பு  கோரியுள்ளது என்பது , காலத்தின் கட்டாயமாக  நிச்சயம்  இருக்கிறது .
இனி,  நாடாளுமன்டத் தேர்தலை எதிர் நோக்கியுள்ள  மைய அரசுக்கு வேறு வழியில்லை . நமது கோரிக்கைகளை நியாயத்தை உணர்ந்தே ஆக வேண்டும். நமக்கு நம் போராட்டப் பாதையில்  நம்பிக்கை  உள்ளது ... அதிலும் உறுதி  மிக அதிகமாக உள்ளது ... நிச்சயம் நாம்  நம்  கோரிக்கைகளில்  வெல்வோம்.  
ஊழியர்களை இதற்காக தயார் செய்ய வேண்டிய  களப்பணி , கோட்ட / கிளைச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள்  மற்றுமுள்ள முன்னணித் தோழர்களிடமே உள்ளது . அடிமட்ட ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை  உங்களுடயதல்லவா ? நிச்சயம் இந்த  செய்தியை  அறிக்கையாக தயார் செய்து  நீங்கள் அவர்களிடம் அளிக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு கோட்டத்திலிருந்தும்  களம் காண  வீரர்களை தயார் செய்திட வேண்டாமா ?
சிந்திப்பீர் ! செயலாற்றுவீர் !  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு 
 ஊழியர்களை இன்றிலிருந்தே தயார் செய்வீர் !
தோழமையுடன் 
J . இராமமூர்த்தி, மாநிலச் செயலர் 
அஞ்சல் மூன்று  தமிழ் மாநிலம்

No comments:

Post a Comment